×

தமிழகம் முழுவதும் தனியார் விடுதிகளுக்கு போலீஸ் 'கிடுக்கிப்பிடி' - அதிரடி புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு..!

 

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பவ்யா, 21, என்ற பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். உடன் தங்கி இருந்த, சென்னை ராமாபுரத்தை சேர்ந்த பாரதி பெருமாள், 21, என்பவர் அதே அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபோல, மாநிலத்தின் பல பகுதிகளில், தனியார் தங்கும் விடுதிகளில், கொலை, தற்கொலை மற்றும் போதைப்பொருள் பதுக்கல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இவற்றை தடுக்க, தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு, போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

விடுதிகளின் பதிவேடுகளை, காலை, மாலை என, இரு நேரங்களிலும், போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் பிறப்பித்துள்ள உத்தரவு:தனியார் விடுதிகளில், வாடகைக்கு அறை எடுத்து தங்குவோரிடம், அவரது பெயர், முகவரி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் அடையாள அட்டை குறித்த விபரங்களை பெற வேண்டும். அவற்றை பதிவேடுகளில் முறையாக பதிவு செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் தங்கி இருக்கும் நபர்கள் மீது சந்தேகம் எழுந்தால், அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி இருப்போர் மீது, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தங்கி இருக்கும் நபர்களிடம், தடை செய்யப்பட்ட பொருட்கள் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.அவர்களிடம் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காகவே, இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.