×

திருப்புவனம் இளைஞரை சரமாரியாக தாக்கும் போலீஸ்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. ஐகோர்ட் சரமாரி கேள்வி.. 

 

திருப்புவனம் இளைஞர் அஜித் காவல் துறையினரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (29)  என்ற இளைஞர். இந்நிலையில் கடந்த ஜூன் 27 அன்று திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) என்பவர்  இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது காரை இளைஞர் அஜித்குமாரிடம் கொடுத்து பார்க் செய்து தருமாறு கூறியுள்ளனர். அதன்பிறகு காரில் வைக்கப்பட்டிந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனதையடுத்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் அளித்தார்.  

அதன்பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேரிடம்  விசாரணை செய்துள்ளனர்.  போலீஸ் விசாரணையின்போது  இளைஞர் அஜித் பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை தொடர்ந்து,  காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இளைஞர் அஜித் கொலை வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.  இந்நிலையில் சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தேஷுக்கு  சிவகங்கை எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  வழக்கு மாற்றப்பட்டதுடன் உடனடியாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  இந்த நிலையில் இந்த வழக்கு இன்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அமர்வு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அஜித்தை காவல்துறையினர் தென்னந்தோப்பில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கும்  வீடியோ நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, நீதிபதிகளிடம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.   மேலும் தாக்குதலின் போது சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் , சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் ஹென்றி தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து அரசு தரப்புக்கு நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அப்போது, அஜித்திடம் ஏன் காவல் நிலையத்தி வைத்து விசாரிக்காமல், வெளியே வைத்து விசாரித்தீர்கள்?,  இளைஞரை வேறு இடத்தில் வைத்து விசாரிக்க யார் அனுமதி கொடுத்தது? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து  நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் வழக்கு பதியவில்லை? என்றும் நகை காணாமல்போனது குறித்து எப்போதும் வழக்குப் பதியப்பட்டது?  இந்தவழக்கு யாருடைய உத்தரவின் பேரில் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது?  உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென  முழுமையான விவரங்களை மறைக்கக்கூடாது என்றும்,  காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கல் முறையாக வேலை செய்கின்றனவா?  என அடுக்கடுக்கான பல கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.  

மேலும், புலனாய்வு செய்வதற்கே  முழு உண்மையை சொல்ல காவல்துறை மறுக்கிறது என்றும், திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்கிற பெயரில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். புலனாய்வு செய்வதற்கே அடிப்பதற்கு காவல்துறை எதற்கு என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  மாஜிஸ்திரேட் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மதுரை ராராஜி அரசு மருத்துவமனை டீன் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இளைஞர் அஜித் குமாரின் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

அத்துடன் யார் உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது என டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்றும்,  சிவகங்கை எஸ்.பி-யை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்? அவரை சஸ்பெண்ட்  செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.   உடற்கூராய்வு அறிக்கை, திருப்புவனம் மாஜிஸ்திரேட் அறிக்கையை  3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.