கைது செய்ய சென்ற போலீஸ்- தலைமறைவான முத்துக்குமரன்
வஹிதா கொடுத்த புகார் அடிப்படையில் கைது செய்ய போலீஸ் சென்ற நிலையில் முத்துக்குமரன் தலைமறைவானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமணம் செய்து கொள்வதாக கூறி பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் ஏமாற்றி விட்டதாக வஹிதா அளித்த புகாரின் பேரில் முத்துக்குமரன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 5 நாட்களுக்கும் மேலாக முத்துக்குமரனின் வீடு பூட்டி இருப்பதால், அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான வஹிதா என்ற இளம்பெண், முத்துக்குமரனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவர் தன்னுடன் நெருங்கிப் பழகியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் இது தொடர்பாக அந்தப் பெண் வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், தான் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த அந்த இளம்பெண், முத்துக்குமரன் மீது உரிய ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தார். தன்னுடன் சேர்ந்து வாழ சம்மதித்து முத்துக்குமரன் தாலி கட்ட வேண்டும், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.