பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை தட்டி தூக்கிய போலீசார்
சென்னை அடுத்த கிளாம்பாக்கம் அருகே பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்
சென்னை கிளாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரைப் பதிவு செய்த போலீசார் சிறுமியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் இரண்டு நாட்களாகப் போலீசார் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில் சிறுமி இருக்கும் இடம் குறித்த ரகசியத் தகவல் கிடைத்தது விசாரணையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்கிற வெற்றிமாறன் வயது 24 என்ற வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரைத் தனியாக அழைத்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் சிறுமியைத் தனது ஊருக்கு அழைத்துச் சென்ற திருநாவுக்கரசு அங்கு வைத்து அவரைத் திருமணம் செய்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
கிளாம்பாக்கம் மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசைத் தீவிரமாகத் தேடி வந்தனர் இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரைப் பிடித்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவருக்குத் தேவையான அறிவுரைகள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு பின்னர் பாதுகாப்பாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பள்ளி மாணவி கடத்தப்பட்டுத் திருமணம் செய்யப்பட்ட இச்சம்பவம், கிளாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.