×

எச்சரிக்கையை மீறி போராட்டம்; மதுரை தமுக்கத்தில் 150 மாணவர்கள் கைது!

 

கடந்தாண்டு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களின் படிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெற்றன. முதல் அலை முடிந்த சில மாதங்களிலேயே இரண்டாம் அலை உக்கிரமாக தாக்கியதால் தேர்வுகளை நேரடியாக நடத்த முடியாத சூழல் நிலவியது. அதனால் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் உட்பட அனைத்து வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 

இருப்பினும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியே நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துவிட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஆன்லைன் வழியே வகுப்பைக் கவனிக்க நினைப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேரடியாகவும் வகுப்புகளுக்கு வரலாம் என சொல்லப்பட்டுள்ளது. தற்போது இரண்டு முறைகளிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்போது செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி வருகின்றன. 

கொரோனா முழுவதுமாக குறைந்துவிட்டதால் நேரடி தேர்வு நடத்த பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தீர்மானித்துள்ளன. ஆனால் மாணவர்கள் மத்தியில் இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்திவிட்டு, தேர்வை நேரடியாக நடத்துவது சரியான அணுகுமுறை அல்ல எனக்கூறி மதுரை, திருச்சி மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டர். ஆனால் நேற்று அறிவிப்பு வெளியிட்ட உயர்க்கல்வித் துறை ஆன்லைன் வழியாக தேர்வு நடத்த வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் மதுரை மாவட்ட காவல் துறை மாணவர்கள் போராட்ட நடத்த அனுமதி இல்லை எனவும், மீறினால் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்தது. ஆனால் எச்சரிக்கை மீறி  மாணவர்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் 150 மாணவர்களைக் கைதுசெய்தது. ஏற்கெனவே 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.