‘மொழி என்பது ஒலிக்கருவி அல்ல, உயிரி’- கவிஞர் வைரமுத்து பதிவு..!
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், உலக தாய்மொழி திருநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து கவிதை மொழியில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று
உலகத் தாய்மொழித் திருநாள்
மொழி என்பது
ஒலிக்கருவி அல்ல;
உயிரி
ஏன் காக்க வேண்டும்
மொழியை?
அது
காலம்சேமிக்கப்பட்ட
கலம்
மரபு - வரலாறு
மருத்துவம் - பண்பாடு
கலை - இலக்கியம்
விழுமியம் – பெருமிதம்
முதலானவற்றைத்
தலைமுறைகளுக்குக் கடத்தும்
ஆவண வாகனம்
ஒரு மொழி வாழ்வது
அது பேசப்படுவதால்தான்
ஒரு மொழிபேசும்
கடைசி மனிதனின் குழியில்
மொழியும் சேர்த்தே
புதைக்கப்படுகிறது
தமிழர்கள்
நிறையப் பிள்ளை பெறுங்கள்
அருள்கூர்ந்து
தாய்மொழியில் பேசுங்கள்;
எழுதுங்கள்
தயவுசெய்து
தாய்மொழியில் திட்டுங்கள்
தனித்தமிழில்
உரையாடுகிறவனை
விசித்திர விலங்காய்ப்
பார்க்காதீர்கள்;
அவன்தான் மொழியின்
கடவுக் கடவுள்
அதிகார மையங்களில்
புழங்காமல்,
அரசியலின் கதகதப்பு
இல்லாமல்,
தாய்மொழி வழிக்கல்வி
தழைக்காமல்,
அறிவியல் கருவிகளை
ஆளாமல்
தழைக்காது தாய்மொழி
ஒவ்வொரு
தேசிய இனத்துக்கும்
இது அச்சடித்த எச்சரிக்கை
தாய்மொழி புழங்குக;
தாய்மொழி வழங்குக;
எவ்வினத்திலும்
தாய்மொழியே விளங்குக