இருதயத்தின் ரத்தம் மார்பில் வடிகிறது - கவிஞர் வைரமுத்து கண்டனம்..!!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு கவர்னர் பங்கேற்கிறார். எனவே, இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று கவர்னர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கவர்னரின் அறிவுறுத்தல் அச்சம் தருகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மரபுகள் நொறுங்குகின்றன. ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திலோ மக்கள் மாளிகையிலோ ஒரு மாநிலத்தின் கல்வி எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகத்திலோ முதலில் மாநிலமொழியின் வாழ்த்தும் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்டு வந்ததே மரபு. முதலில் தேசப் பாடலும் பின்னர் தேசிய கீதமும் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட வேண்டும் என்று உரிமை மீறிய வரிசையை அறிவுறுத்துவது பெருமைக்குரியதல்ல.
தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா? இருதயத்தின் ரத்தம் மார்பில் வடிகிறது வேண்டாம் இந்த வரிசை மீறல். அந்தந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை தருவதுதான் இறையாண்மையின் நிறையாண்மை காக்கும் முறையாண்மையாகும். வெற்றித்தமிழர் பேரவை சார்பில் என் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன். கழற்றப்பட்ட தமிழ்த்தாயின் மகுடம் சிரசு சேரட்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.