×

கோவை மாணவியை அடையாளப்படுத்திய 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு!!

 

கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு காரணம் அவரது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி அளித்த பாலியல் தொல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  அத்துடன் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு,  கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை  26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நந்தினி உத்தரவிட்டார் . இதையடுத்து மீரா ஜாக்சன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவியின் பெயர்,  அவர் வசித்த இடம் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட்ட 48 யூடியூப் சேனல்கள் மீது புகார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 வயதிற்கு குறைவான சிறுமிகள் பாதிக்கப்படும் போது அவர்கள் குறித்த அடையாளங்களை வெளியிடக் கூடாது என்ற உத்தரவு  உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.