×

எங்கள் வெற்றி கூட்டணியில் தவெக இணைய வேண்டும் - பாமக பொருளாளர் திலகபாமா..!

 

சென்னையில் வருகிற 10 ஆம் தேதி நடைபெற உள்ள பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி ஆதரவு) இளைஞர் சங்கப் பொதுக்குழு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் சாத்தூரில் இருந்து 100க்கு மேற்பட்ட புதிய நிர்வாகிகள் கட்சியில் இணையும் விழா மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில், மாநில பொருளாளர் திலகபாமா முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் சங்க செயலாளர் பி.வி.செந்தில் கலந்துகொண்டு இளைஞர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ''தமிழகத்திலேயே அதிக இளைஞர்களை கொண்டது பாட்டாளி மக்கள் கட்சி தான். எனவே, வரும் 10 ஆம் தேதி சென்னையில் நடக்கும் பொதுக்குழு கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். தேர்தலை சந்திப்பதற்கு இளைஞர்களை தயார் செய்வது பற்றி, ஆலோசனை கூட்டம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற இருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் யார் எப்போது வழக்கு தொடுத்தாலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு அத்தனை ஆவணங்களும் மருத்துவர் அன்புமணி ராமதாசிடம் இருக்கிறது என்பது தெரிந்து தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்களது கூட்டணியில் பாமகவை இணைத்து கொண்டுள்ளது.

எங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமில்லை. திமுகவை விரட்டுவதற்காக, எல்லோரும் ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திமுக கூட்டணியில் இருந்தே முக்கிய நிர்வாகிகள் வெளியே வந்து, எங்களது கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. திமுக மீது மக்களிடையே பரவலாக வெறுப்பு அலைகள் வீசிக்கொண்டு இருக்கிறது. ஆகையால் மக்கள் விரும்புவது நடைபெற வேண்டும். அதற்கு அதிமுக கூட்டணி ஒரு களமாக அமையும்.

தமிழக வெற்றிக்கழகம் வரும் தேர்தலில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் அனைத்தும் திமுகவில் இருந்து பிரியும் வாக்காகவே இருக்கும். விஜய்யை பொறுத்தவரை ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்கிற கேள்வி அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் இருமுனைப் போட்டி அமைய வேண்டும். அதற்கு த.வெ.க அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்'' என்று திலகபாமா தெரிவித்தார்.