”2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அல்லது அதிமுகவுடன் பாமக கூட்டணி”
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அல்லது அதிமுகவுடன் தான் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும், தேர்தல் கூட்டணி வேட்பாளர் என எல்லா முடிவுகளுமே ராமதாஸ் தான் எடுப்பார் என பாமக மாநில பொருளாளர் சையது மன்சூர் உசேன் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் இளையரசனேந்தல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், மாநில பொருளாளர் சையது மன்சூர் உசேன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்கள் மற்றும் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்த பேனர்களில் ராமதாஸ் புகைப்படத்துடன், அன்புமணி ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் சையது மன்சூர் உசேன், “அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் உள்ளடக்கம் தான். ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவியை அன்புமணி ராமதாஸ் தான் வைத்ததாக பரவலாக பேசக்கூடிய கருத்து நாம் பதிலளிக்க முடியாது. ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது உண்மை! எடுத்தது உண்மை, தனியார் துப்பறிவு நிறுவனம் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இதற்கான பதில் கிடைக்கும் என்று காவல்துறை சொல்லியுள்ளது
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ஆறு மாதத்திற்கு முன்பு தொடங்கி இருக்கலாம். தற்போது தாமதமாக தொடங்கி இருக்கிறார்கள், முன்பே தொடங்கி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ராமதாஸ் கூறுகிறார். இது பாராட்டுகிற மாதிரி தான். இதை நான்காண்டுகளாக செய்து இருக்கலாம் என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். இருவரும் ஒரே கருத்தை தான் கூறி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் இணைந்தே தேர்தலை சந்திப்பார்கள். கூட்டணி பேச்சு வார்த்தை, கூட்டணி தலைமை எல்லாமே ராமதாஸ் தான் முடிவெடுப்பார். பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் மாநாட்டில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 1967 முதல் திமுக கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்தித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி கூட தனித்து போட்டியிட்டுள்ளது. சந்தர்ப்பத்தின் தேவைக்கேற்ப கூட்டணி மாறுவது இயற்கை
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அல்லது அதிமுகவுடன் தான் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும். தேர்தல் கூட்டணி வேட்பாளர் என எல்லா முடிவுகளுமே ராமதாஸ் தான் எடுப்பார். வாரிசு அரசியல் குறித்து ராமதாஸ் நானும் சிறு தவறு செய்து விட்டேன் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். வேறு எந்த அரசியல்வாதிகளும் வெளிப்படையாக இது போல சொன்னதில்லை. தவறு என்று ராமதாஸ் கூறியுள்ளார். அதை சரி செய்து கொள்ளலாம். தேர்தலில் வேட்பாளர்கள் குறித்து முரண் ஏற்பட்டால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் பேசி தீர்த்துக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.