×

“எளிமைக்கு மற்றொரு பெயர் நல்லக்கண்ணு”- ராமதாஸ்

 

நல்லக்கண்ணு இழப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பேரிழப்பு என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1925-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டத்தில் பிறந்த நல்லக்கண்ணு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். பின்னர் சுதந்திர இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தில் இணைந்து மக்கள் தலைவராக பாராட்டப்பட்டவர். அவர் வாழ்வு முழுவதும் எளிமை, நேர்மை, மற்றும் சமூகநீதிக்கான போராட்டம் என்றே அடையாளம் காணப்பட்டது. மென்மையானவர் மட்டுமல்ல, அவரின் குரலும் மென்மையானது. ஆனால் அவரின் போர் குணம் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்களுக்காக ஒலிக்கப்பட்டது. 

பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை தண்டனைகளும் அனுபவித்துள்ளார். நதிகள் இணைப்பாக தொடர்ந்து வலியுறுத்தியவர். விவசாயிகளின் நில உரிமை, நீர்வள உரிமை குறித்தும், காவிரி உள்ளிட்ட நதிகள் பிரச்சினைகளில் தன் கருத்தை ஆணித்தரமாக தெரிவித்தார். மிக எளிமையான வாழ்க்கையோடு தனிப்பட்ட சொத்து இல்லாமல் வாழ்ந்தவர். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத மக்கள் தலைவர். பல சமூக அமைப்புகள் மற்றும் அரசால் வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்பட்டது. மனிதநேயம் மிக்கவர். இவர் இழப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பேரிழப்பு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.