பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல்- ராமதாஸ்
காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், குறிப்பாக இளம் மாணவர்கள் அருந்தும் குடிநீரில் மலத்தைக் கலப்பது என்பது மனிதர்களாக பிறந்தவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடுமை ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.