"மாம்பழம் சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம்; எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்" - ராமதாஸ்
மாம்பழம் சின்னம் எங்களுக்கு தான் சொந்தம். நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாமக நிறுவனர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். நேற்று இரவு நடைபெற்ற வரவேற்பு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்து மணமக்களை வாழ்த்திய நிலையில் இன்று காலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மனைவி, மகள் காந்திமதி மற்றும் முகுந்தன் ஆகியோர் குடும்பத்துடன் வருகை தந்தனர். மணமக்கள் உறுதி மொழி எடுத்த பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் திருமணத்தை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், மாம்பழம் சின்னம் எங்களுடையது தான், எங்களுக்கு சொந்தமானது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகும், மாம்பழ சின்னம் எங்களுக்கு சொந்தமாகும் என தெரிவித்தார். மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என பேட்டியளித்தார்.