அன்புமணிக்கு போட்டி... தேதி குறித்த ராமதாஸ்! பாமகவில் பரபரப்பு
டிச.12 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் நடைபெறவுள்ள மாநாடு தமிழகமே குலுங்குகின்ற அளவுக்கு நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அரக்கோணம் அடுத்த நெமிலி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “குடிப்பழகத்துடன் கஞ்சாவும் சேர்ந்து கொண்டு இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழித்து வருகிறது. மாறி மாறி போதைக்கு அடிமையாகி வருகின்றனர். முன்பெல்லாம் யாராவது ஒரு வீட்டில் தான் குடிப்பார்கள், இப்போது யாராவது ஒருவர் தான் வீட்டில் தான் குடிக்காமல் உள்ளனர். அந்த அளவிற்கு குடிப்பழக்கம் வீட்டையும், நாட்டையும் அழித்து வருகிறது.
பட்ஜெட்டில் கூறியது போல அரசாங்கம் செயல்பட்டால் விவசாயம் நன்கு செழிக்கும். ஆனால் அதை பின்பற்றாததால், விவசாயிகள் நிலங்களை ரியல் எஸ்டேட்டிற்கு விற்று விட்டு கடை வைத்து பிழைத்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். அடிமாட்டு விலைக்கு நிலங்களை விற்றுவிட்டு தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு விவசாயிகள் சரியாக வாழவில்லை. பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு வகையான கல்வி. சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பிற்கு மாதாமாதம் 4 லட்சம் கட்டுகின்றனர். ஆனால் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் படிக்க சென்றால் அங்கு ஆசிரியர்களும், முறையான வசதிகளும் இல்லை. பாமக எல்லா மக்களுக்காகவும் பாடுபடும் கட்சி. தமிழகத்தில் உள்ள 324 ஜாதிகளுக்கும் அதன் மக்கட்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். டிச.12 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்க வேண்டுடி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகமே குலுங்கும் வகையில் அமையும்.
வரும் தேர்தலில் நாம் அமைக்கும் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக இருக்கும். நாம் செல்லும் இடம் எப்போதுமே வெற்றி தான். ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்கும். கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அடுத்த மாதம் அறிவிப்பேன். ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே. ஆக்கல், அழித்தல், காத்தல் மூன்றும் உள்ளது பெண்களுக்கே. பெண்கள் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. பெண் சமூகத்திற்கு எதிராக யாரேனும் பேசினால், செயல்பட்டால் அவர்களை அழிக்கும் சக்தியும் பெண்களிடம் தான் உள்ளது. தேர்தலில் காசு கொடுப்பார்கள், ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என உறுதியாக இருக்க வேண்டும், குறிப்பாக பெண்கள் அவ்வாறு இருக்க வேண்டும்.
டிச.17ல் அன்புமணி அறிவித்துள்ள சிறை நிரப்பம் போராட்டம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் நாங்கள் டிசம்பர் 12 நாங்கள் நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் தமிழகமே குலுங்கும் வகையில் அமையும். அதற்கு நிர்வாகிகள் சிறப்பான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.” என்றார்.