×

பிரச்சாரத்தில் மயங்கிய ராமதாஸ்- மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

 

 

உடல்நலக்குறைவு காரணமாக சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அருளை ஆதரித்து சேலத்தில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியபோது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு ராமதாஸ் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ராமதாசுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோடை வெயில் காரணமாகவும்,அதிக அலைச்சல் காரணமாகவும் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 


சற்று உடல் நலம் தேறிய நிலையில் ராமதாஸ், சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி மேல் சிகிச்சைக்காக சேலத்தில் இருந்து ராமதாஸ் காரில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சுமார் 12 மணி அளவில் ராமதாஸ் வந்தடைந்தார். அவருடன் ஜி.கே.மணி, ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டவரும் உடன் காரில் வருகை தந்தனர். தற்போது அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர் ராமதாசுக்கு உடல்நலம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரை தொலைபேசியில் அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.