×

“மகன் என்ற கடமையிலிருந்து அன்புமணி தவறிவிட்டார்”- அருள் எம்.எல்.ஏ.

 

சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ராமதாசை அனைத்து தலைவர்களும் நேரில் பார்த்து , நலம் விசாரித்து சென்ற  நிலையில் ,  அன்புமணி தொலைத்து விடுவேன் என பேசியது அவரது ஆற்றாமையை காட்டுகிறது என சேலத்தில் சட்டமன்ற உறுப்பினரும் பாமக மாநில இணை பொது செயலாளருமான அருள் தெரிவித்துள்ளார்.

இன்று சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அருள் எம்.எல்.ஏ, “பாமக நிறுவனரும் கட்சியின் தலைவருமான டாக்டர் ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்றார்.  அப்போது அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்த ,  முதல்வர் ஸ்டாலின் ,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ,  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட   அனைத்து கட்சி தலைவர்களும் மருத்துவர் ராமதாஸ் அவர்களை  சந்தித்து நலம் விசாரித்தனர்.  அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அப்போலா  மருத்துவமனைக்கு வந்த அன்புமணி, மருத்துவரை மட்டும்  சந்தித்து பேசிவிட்டு,  ராமதாஸ் அவர்களை சந்திக்காமலேயே சென்று விட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸ் குறித்து தவறான தகவலையும் செய்தியாளர்களிடம் தெரிவித்து பதற்றத்தை ஏற்படுத்தினார்.  

ராமதாஸ் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது. அவர் ஐசியூவுக்கு கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் ராமதாஸ் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என செய்தியாளர்களிடம் பேட்டியை கொடுத்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியவர் அன்புமணி.  ராமதாஸ் சிகிச்சை குறித்து தவறான தகவலை பரப்பியவர் அன்புமணி.  ஒரு மகன் என்ற கடமையிலிருந்து அன்புமணி தவறிவிட்டார். பெற்றெடுத்த தந்தையை, கட்சியை விட்டு துரத்த வேண்டும் என்று செயல்பட்டவர்தான் அன்புமணி.நேற்று அன்புமணி,  தொலைத்து விடுவேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.  பாட்டாளி மக்கள்  கட்சியையும் , தொண்டர்களையும்  தான் தொலைத்து விட்டார். அன்புமணி தற்போது  ஆற்றாமையின் வெளிப்பாடு காரணமாக ஏதேதோ பேசி வருகிறார். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் வரும் 26 ஆம் தேதி ,  ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது” என்றார்.