அன்புமணி மீது நடவடிக்கையா?- அருள் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
அன்புமணி ராமதாஸுக்கு வழங்கிய கெடு முடிந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன.? தைலாபுரம் தோட்டத்தில் கூடிய ஒழுங்கு நடவடிக்கை குழு எடுக்கப்போகும் முடிவு என்ன? என விழுப்புரத்தில் பா.ம.க எம்.எல்.ஏ அருள் பேட்டியளித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்துள்ள 16 குற்றச்சாட்டுகளை பரிசீலித்து, செப்டம்பர் 3ம் தேதிக்குள் ராமதாஸ் தனது முடிவை அறிவிப்பார் என அக்கட்சி எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார்.ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 9 பேரும் தங்களது கருத்தை சீலிட்ட கவரில் ராமதாஸிடம் ஒப்படைத்துள்ளனர், அன்புமணி பதிலுக்காக மேலும் 2 நாட்கள் காத்திருக்க முடிவு செய்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே நீடித்துவரும் மோதல் போக்கு காரணமாக காட்சியை இரண்டு அணிகளாக பிரிந்த செயல்பட்டு வருகிறது. இருவரும் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினர். அந்தவகையில் கடந்த மாதம் 17ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் அருகே பொதுக்குழு நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் மொத்தமாக 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மைக்கை தூக்கி வீசியது, ராமதாஸ் இல்லத்தில் அவர் அமரும் இருக்கைக்கு அடியில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது, 40 முறை ராமதாஸுடன் பேசியதாக பொய்யான தகவலை பொது வழியில் தெரிவித்தது, நிறுவனர் அன்புமணி ராமதாஸிடம் அனுமதி பெறாமல் உரிமை மீட்பு குழு பயணத்தை தொடங்கியது, கட்சிக் கொடியை பயன்படுத்தக்கூடாது எனக் கூறியும் அதனை மீறியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது அந்த 16 குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக்கம் கேட்டு மின் அஞ்சல் மூலம் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணி தரப்பில் இதுகுறித்து தற்போதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.