பாமகவில் நிலவும் பிரச்னைக்கு நான் காரணமா?- ஜி.கே. மணி பரபரப்பு பேட்டி
பாமகவுக்கு இது சோதனை காலம், பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு நான் காரணம் எனக் கூறுவது அபாண்டமானது என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி விளக்கம் அளித்துள்ளார்.
பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை, குடும்ப விவகாரங்களை வெளிப்படையாக முன்வைத்தார். இந்த சந்திப்பின் போது, பாமகவில் இளைஞர் அணித் தலைவர் பதவிக்கு முகுந்தனை நியமிக்கும் விவகாரத்தில் தாயார் மீது பாட்டில் வீசித் தாக்கினார் அன்புமணி. பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பவர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து அடுத்தடுத்து நீக்கிவருகிறார் ராமதாஸ். அதேசமயம் அன்புமணி, கட்சியின் தலைவரான எனக்கே அதிகாரம் உள்ளது, ராமதாசின் இந்த நீக்கம் செல்லாது எனக் கூறிவருகிறார்.
இதனிடையே ராமதாஸை வைத்து எப்படி கட்சியை வளர்ப்பீங்க...? தந்தை, மகனை ஜி.கே.மணி பிரித்து வைக்கிறார் என பாமக பொருளாளர் திலகபாமா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ராமதாசை ஜி.கே.மணி பின்னாலிருந்து இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஜி.கே.மணி, பாமகவில் நிலவும் பிரச்னைக்கு நான் காரணம் எனக் கூறுவது அபாண்டமானது. பல ஆண்டுகளாக கட்சியில் உள்ள நான், கட்சி சிதற வேண்டும் என நினைப்பேனா? கால சூழலால் பாமகவில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. பொறுப்பாளர்களை மாற்ற வேண்டாம் என ராமதாஸிடம் வற்புறுத்தினேன். ராமதாஸும் அன்புமணியும் சந்தித்து பேச வேண்டும் என்பதே எங்கள் அனைவரது விருப்பம். அன்புமணியும், ராமதாஸும் சந்தித்துவிட்டால் பாமக வீறுகொண்டு எழும். எனக்கு எதிரான அவதூறு செய்திகளை பார்த்து கண்ணீர் வடித்தேன். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை, காலை எழுந்தவுடன் ராமதாஸ் குறித்தும், கட்சி குறித்தும் தான் நினைப்பேன். 10.5 சதவீத இடஒதுக்கீடுக்காக நானும் பாடுபட்டேன், ஜி.கே. வாழ்க என சொல்வதை ஏற்க மாட்டேன். அய்யா வாழ்க, சின்னய்யா வாழ்க என சொல்லச் சொல்வேன், இருவரும் சந்தித்தால் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி உறுதி” என்றார்.