×

பாமக பொதுக்குழு- மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு திட்டம்

 

அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக வழக்கறிஞர் கோபு கூறியுள்ளார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை பாமக பொதுக்குழு கூட்டத்தை, அன்புமணி நாளை கூட்டியுள்ளார். அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட  மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ், அன்புமணி இருவரையும் தன் அறைக்கு வரும்படி  அழைப்பு விடுத்தார். தைலாபுரத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் காணொலி வழியாக பேசினார். அதேபோல் அன்புமணி ராமதாசும்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ராமதாஸ்- அன்புமணி உடன் நீதிபதி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து மாமல்லபுரத்தில் நாளை அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்  உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 


இந்நிலையில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராமதாஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக வழக்கறிஞர் கோபு கூறியுள்ளார். இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு செய்ய ராமதாஸின் அனுமதியை எதிர்நோக்கி வழக்கறிஞர்கள் காத்திருக்கின்றனர். ராமதாஸ் அனுமதி கிடைத்தால் தலைமை நீதிபதியிடம் முறையிடவுள்ளனர்.