×

“மாற்றம் உறுதியானது... வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி”- அன்புமணி ராமதாஸ்

 

மாற்றம் உறுதியானது, மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது. வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வரும் நிலையில், ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரிவதாகவும்,  பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதாகவும் களத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை 10 மாதங்களுக்கு முன் தொடங்கிய போதே, தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு  எதிரான அதிருப்தி அலை உருவாகியிருப்பதாகவும்,  இது அடுத்து வரும் மாதங்களில்  வலுவடைந்து  தேர்தலில் போது சுனாமிப் பேரலையாக மாறி ஆட்சியைத்  தூக்கி எறியும் என்று கூறினேன்.  அது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் கடந்த  ஐந்தாண்டுகளாக, கட்டுப்படுத்தப்படாத கஞ்சா போதை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான  தொடர் பாலியல் வன்கொடுமைகள், வேளாண் துறை வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை. தாங்க முடியாத அளவுக்கு வரி மற்றும் கட்டண உயர்வுகள், விலைவாசி  உயர்வு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் சீரழிவு  என நரக வாழ்க்கையைத் தான் அனுபவித்து வந்தனர். அவர்களின் விடுதலைக்கான விதை இன்று ஊன்றப்பட்டு விட்டது; மே 4-ஆம் தேதி விடுதலை மலரும்.

ஆட்சி மாற்றத்தை எண்ணி மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதை வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியில் வரும் மக்களின் முகங்களில் பார்க்க முடிகிறது. இந்த நாளுக்காகத் தான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்திருந்தது. மே 4-ஆம் தேதி முழுமையான வெற்றியைக் கொண்டாடுவோம்.  பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், அதற்காக கடுமையாக உழைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.