16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை தேவை - அன்புமணி ராமதாஸ்
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைப் போல குழந்தைகளின் உடல் நலம், மனநலம், கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக சட்டம் கொண்டு வர வேண்டும். சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு மனஅழுத்தம், கவனச் சிதறல், இணையவழி சீண்டல், உடல்நல பாதிப்புகள் மற்றும் வாசிப்பு, விளையாட்டு பழக்கங்கள் குறைந்து வருகிறது. குழந்தைகளை சமூக ஊடகங்களின் பிடியில் இருந்து மீட்க 16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டை சட்டரீதியாகத் தடை செய்வதே நிரந்தரத் தீர்வு. ஆகவே மனநல, உடல்நல பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை தேவை. 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் பிரான்ஸில் அமலில் உள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இந்த தடையை கொண்டுவந்துள்ளது.
சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடான இங்கும் இந்த தடையை முன்னெடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பதற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சமூக ஊடகங்களே காரணம். சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை மறந்துவிட்டனர். குழந்தைகளை சமூக ஊடகங்களின் பிடியில் இருந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.