×

தமிழக மீனவர்கள் ஒரே வாரத்தில் 2வது முறையாக தாக்குதல் - அன்புமணி கடும் கண்டனம்!!

 

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்துடன் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய மற்றும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சூழலில் கடந்த 11ம் தேதி கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10-க்கும் மேற்பட்ட படகுகள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி எறிந்தனர். அத்துடன் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும் விரட்டி அடைக்கப்பட்டுள்ளனர்.  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர்.  15ற்கும் மேற்பட்ட கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின்  வலைகளை அறுத்து எறிந்தனர்.  இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே 10 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளனர்; அவர்களின் வலைகள் அறுத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன; பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது! தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்துவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த 10-ஆம் தேதி நள்ளிரவிலும் கச்சத்தீவு பகுதியில் இதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது! திசம்பர் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 42 மீனவர்களும், 20-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் சிங்கள அரசால்  இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இன்னொருபுறம் நடுக்கடலில் சிங்களப்படையின் அத்துமீறல் தொடர்கிறது. இவற்றுக்கு முடிவு எப்போது? ஒரு புறம் இலங்கைக்கு இந்தியா நிதியுதவியும், இராணுவ உதவிகளையும் வாரி வழங்குகிறது. மறுபுறம் தமிழக மீனவர்களை சிங்களப் படை கொடுமைப்படுத்துகிறது. இது என்ன நியாயம்?  மீனவர்கள் மீதான அத்துமீறலை கைவிடும்படி இலங்கையை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.