×

இலங்கை கடற்படையினர் மீனவரைக் கொன்று உடலை எடுத்துச்சென்றது மனிதநேயமற்ற அரக்கத்தனம்!

 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று பேர் விசைப் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.  இலங்கை  எல்லையை தாண்டியதாக கூறி  இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  அத்துடன் இவர்கள் விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் விசைப்படகு சேதமடைந்ததுடன் தண்ணீருக்குள் மூழ்கி உள்ளது.

இதில் படகில் இருந்த 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.  இதையடுத்து  இலங்கை கடற்படையினர் தண்ணீரில் தத்தளித்த சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய இரண்டு மீனவர்களையும் மீட்டதுடன், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்கள் படகில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.  ஆனால் கடலில் தத்தளித்த ராஜ்கிரண் மட்டும் மாயமாகியுள்ளார்.

 இதை தொடர்ந்து மீட்கப்பட்ட 2 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று இந்திய அரசுக்கு  தகவல் கொடுத்துள்ளனர்.காணாமல் போன ராஜ்கிரண் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாகவும், அவரின் உடலை இலங்கை கடற்படையினர் எடுத்து சென்றதாகவும் தெரிகிறது. இதனால் படகை மூழ்கடித்து மீனவரை கொலை செய்ததாக இலங்கை அரசை கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை தேவை என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கக்கடலில் புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்களின் படகு மீது கப்பலை மோதிக் கவிழ்த்து  ராஜ்கிரண் என்ற மீனவரைக் கொன்ற சிங்களப் படையினர், அவரது உடலையும் இலங்கைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது மனிதநேயமற்ற அரக்கத்தனம்!சிங்களப்படையால் கொண்டு செல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலை உடனடியாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு குறைந்தது  ரூ.1 கோடி இழப்பீடாக பெற்றுத் தர வேண்டும்! கேரளத்தையொட்டிய அரபிக்கடலில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றதற்காக இத்தாலிய கடற்படையினர் மீது எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அதை விடக் கடுமையான நடவடிக்கைகளை  சிங்களக் கடற்படையினருக்கு எதிராக அரசு மேற்கொள்ள வேண்டும்! " என்று குறிப்பிட்டுள்ளார்.