☰
×

''நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் நடந்த ஊழல்; ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்''- அன்புமணி 

 

பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில்  ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  கல்வி, நூலகம் சார்ந்த விஷயங்களிலும், அறிவை வளர்க்கும் நூல்களை வாங்குவதிலும்  ஊழல் செய்வதை மன்னிக்கவே முடியாது.எவராலும்  அறியப்படாத ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், நாலடியார் நூல்களை மற்ற பதிப்பகங்கள் ரூ. 350-க்கு விற்கும் நிலையில்,  ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் முந்நூறு பக்க நூலை ரூ. 1,445 வாங்கியிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன்  குற்றஞ்சாட்டியுள்ளார். அதை பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் மறுமொழிந்துள்ளார்.

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது தான் நூலகங்களின் நோக்கம். அவற்றில் மக்களுக்கு பயனுள்ள, அறிவை வளர்க்கக்கூடிய நூல்கள் தான் இடம்பெற வேண்டும். எவராலும் அறியப்படாத, யாருக்கும் பயன்படாத  நூல்களை இதுவரை இல்லாத  விலையைக் கொடுத்து வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இதன் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். எனவே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு  விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.  ஊழலின் பின்னணி குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக  விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.