×

"ரூ.1500 கோடி வசூலித்து விட்டு, விவசாயிகளை ஏமாற்றுவதா?'' - அன்புமணி ராமதாஸ்

 

தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா?  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்வதற்காக இலவச மின்சார இணைப்புக் கோரி தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்த 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 8 மாதங்களாக மின்இணைப்பு வழங்காமல் மின்வாரியம் தாமதப்படுத்தி வருகிறது. வறட்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் உழவர்களிடம் ரூ.1250 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துக் கொண்டு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றைத் தவிர தமிழ்நாட்டிலேயே தோன்றி தமிழ்நாட்டுக்குள் பாயும் ஆறுகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை உள்ளிட்ட ஆறுகள் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு பாசன ஆதாரமாக திகழ்கின்றன என்றாலும், இவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கர்நாடகம் கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் இருப்பதால், அந்த மாநிலங்கள் மனம் வைத்தால் தான் இவற்றில் தண்ணீர் வரும்.

அதுமட்டுமின்றி, கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரிய அளவிலான பாசனத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததால், மாநிலத்தின் ஒட்டுமொத்த பாசனப் பரப்பில் 55% நிலங்கள் மட்டுமே ஆறுகள் மற்றும் கால்வாய் பாசன ஆதாரங்களை நம்பியுள்ளன. மீதமுள்ள 45% நிலங்களில் நிலத்தடி நீரை நம்பித் தான் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நிலத்தடி நீரை நம்பியுள்ள பகுதிகளில் பம்ப் செட்டுகளை இயக்குவதற்காக இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான மின் இணைப்பை பெறுவது தான் உலகில் மிகவும் கடினமான செயலாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே 23.56 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 லட்சம் பேர் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இலவச மின் இணைப்பை முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்காக தட்கல் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் அவ்வப்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக இணைப்பு வழங்கப்படும். வேளாண் பம்ப் செட்டுகளுக்கான இலவச மின் இணைப்பு பெறுவற்காக தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு திசம்பர் மாதம் திமுக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து திசம்பர் 31 ஆம் தேதி வரை 47,554 விவசாயிகள் விண்ணப்பித்தனர். அதுமட்டுமின்றி, இலவச மின்சார இணைப்புக்காக 5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத் திறன் வரை ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வீதம் உழவர்கள் கட்டணம் செலுத்தினர். விண்ணப்பித்தவர்களில் முதல்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு 15 நாள்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. ஆனால், 8 மாதங்களாகியும் ஒரே ஒரு இணைப்பு கூட வழங்கப்படவில்லை.

தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை சாகுபடி செய்திருப்பார்கள். ஆனால், மின்சார இணைப்பு வழங்கப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார்கள். தட்கல் மின் இணைப்புக்காக 47,554 உழவர்களும் சேர்ந்து சுமார் ரூ. 1250 கோடி முன்பணமாக செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு முன்பாக கடந்த 2023 ஆம் ஆண்டில் இதே தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 12,566 உழவர்கள் ரூ.250 கோடிக்கும் கூடுதலாக முன்பணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பித்த விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் இல்லை. அவர்களில் பெரும்பான்மையினர் வட்டிக்கு கடன் வாங்கி தான் முன்பணத்தை செலுத்தியுள்ளனர். அதற்காக வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்த முடியாமல், குறுவை சாகுபடி செய்ய முடியாததால் வருவாயும் ஈட்ட முடியாமல் பெரும் துயரத்தில் விவசாயிகள் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களின் கடன் சுமை அதிகரித்திருக்கிறது. வேளாண் இலவச மின்சாரத்திற்கான இணைப்புக்காக 60,120 உழவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்திருக்கும் மின்சார வாரியம் மின் இணைப்பை வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும். தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாள்களிலிருந்து 90 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ரூ.1000 மின் கட்டணம் செலுத்தத் தவறும் விவசாயிகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்கும் மின்சார வாரியம், அவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்து வைத்துக் கொண்டு 12,566 பேருக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாகவும், மீதமுள்ளவர்களுக்கு 8 மாதங்களாகவும் மின்சார இணைப்பு வழங்க மறுப்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதை நியாயப்படுத்த முடியாது.

திமுக ஆட்சியில் தான் இலவச மின் இணைப்புக்காக உழவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றாலும், அடுத்த சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தான் மின் இணைப்புகள் வழங்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு தவெக அரசு பதவியேற்ற நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திமுக அரசுக்கு போட்டியாக தவெக அரசும் மின் இணைப்பு வழங்காமல் துரோகம் செய்திருக்கிறது, இதை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள். விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாதது, பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால் உழவர்கள் ஏற்கனவே பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களிடம் ரூ.1500 கோடி வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்காமல் அவர்களுக்கு கூடுதல் துயரத்தை அரசு வழங்கக் கூடாது. தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.