NLC நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா..?- அன்புமணி
என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்திற்காக 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா? தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்துள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை, நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக இடிக்க என்.என்.சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையாகத் திகழும் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. தெற்கு மேலூரில் அமைந்திருக்கும் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயில் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் குலதெய்வக் கோயிலாக திகழ்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு அப்பால் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குலக்கோயிலாக இந்த கோயில் திகழ்கிறது.
இந்த கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள நிலங்களை என்.எல்.சி நிறுவனம் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. இப்போது 1ஏ சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக கோயிலை இடிக்கும் முயற்சியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வாழும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அதையும் மீறி கோயிலை இடிக்க என்.எல்.சி துடிக்கிறது. இதற்காக தமிழக அரசின் ஆதரவையும் கோரியிருக்கிறது. அங்காளம்மன் - பாவாடைராயன் கோயில் அதே பகுதியில் நீடிப்பதால் என்.எல்.சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அதே நேரத்தில் அந்தக் கோயில் இடிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கை பாதிக்கப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு தெற்கு மேலூர் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி நிறுவனம் கைவிட வேண்டும்; இந்த விஷயத்தில் என்.எல்.சிக்கு தமிழக அரசும் போதிய அழுத்தம் கொடுத்து இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.