×

பெண்களைக் காக்க, போதைகளை ஒழிக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பீர்- அன்புமணி

 

பெண்களைக் காக்க, போதைகளை ஒழிக்க, வேளாண்மை, வேலைவாய்ப்புகளைப் பெருக்க அதிமுக - பாமக கூட்டணிக்கு வாக்களிப்பீர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை தீமைகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் ஏப்ரல் 23&ஆம் நாள் நடைபெறவிருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 16 சட்டப்பேரவைத் தேர்தல்களும் ஆட்சிக்கான உரிமையை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தல்கள் என்றால், இத்தேர்தல்  அதையும் கடந்து ஐந்தாண்டுகளாக பீடித்திருந்த கிரகணத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்கான தேர்தல் ஆகும். அதனால், இந்தத் தேர்தலில் வாக்காளர்களின் முக்கியத்துவமும், பொறுப்பும்  அதிகரித்திருக்கிறது. தேர்தல் என்றாலே அது தமிழ்நாட்டில் திருவிழாவாகத் தான் பார்க்கப்படும். ஆனால், இந்தத் தேர்தல் நீதிக்கும், அநீதிக்கும் இடையிலான போராகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற பரப்புரைகள் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், களத்தில் உள்ள கூட்டணிகளின் தன்மைகளை தமிழக வாக்காளர்களாகிய நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். நீங்கள் அறிந்த உண்மைகளின் அடிப்படையில் யார் வீழ்த்தப்பட வேண்டும்; மாநிலத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்துக் காக்கும் பொறுப்பில் யார் அமர்த்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான 48 மணி நேரம்  இன்று மாலை 6.00 மணி முதல் தொடங்குகிறது. இந்தக் காலத்தில் அறிவார்ந்தும், பொறுப்புடனும் சிந்தித்து உங்களின் முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் தேவைகள் தேர்தலுக்கு, தேர்தல் மாறுபடும். இன்றைய நிலையில் நமக்கான தேவை பெண்கள் மற்றும் குழந்தைகளுகான பாதுகாப்பும், இளம் தலைமுறையை போதையின் பிடியிலிருந்து மீட்டு  எடுப்பதும் தான். உண்மையில் இந்த இரண்டும் வெவ்வேறு பிரச்சினைகள் அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை தான். வெளியில் செல்லும் பெண்களும், பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளும் பத்திரமாக வீடு திரும்புவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதும், தங்களைக் காத்துக் கொள்ளப் போராடும் பெண்களும், குழந்தைகளும் படுகொலை செய்யப்படும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. ஐந்தாண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 44,418 குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிராக ரூ.62,489 குற்றங்களும் நடந்திருக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பொருத்தவரை தமிழ்நாடு கொடும் நரகமாக மாறியிருக்கிறது.இத்தனைக் கொடுமைகளுக்கும் காரணம் தமிழ்நாட்டில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைபொருள்களின் புழக்கம் தலைவிரித்தாடுவது தான். அதிகாரப்பூர்வமாக 4,787 மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றால், சட்டவிரோதமாக 20,000&க்கும் கூடுதலான சந்துக் கடைகளும், 1500&க்கும் கூடுதலான மனமகிழ் மன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இன்னொருபுறம் தெருவெங்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களும் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு 22 லட்சம் கிலோ விற்பனையாகும் அளவுக்கு தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் பெரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. இதற்கு எதிராக ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்தும் போதைப்பொருள்கள் விற்பனையை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. மாறாக, போதை வணிகம் செய்பவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்தும், கோடிக்கணக்கில் நன்கொடை வாங்கியும் போதை வணிகத்தை திமுகவின் முதல் குடும்பம் ஊக்குவிக்கிறது. இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகள், இளைஞர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக செய்த துரோகங்கள் பட்டியலிட்டு மாளாதவை. அரசுத்துறைகளில் 5.5 லட்சம் மற்றும் தனியார் துறையில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறி ஏமாற்றியது, கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்து அதற்கு மாறாக அதிமுக ஆட்சியில் இருந்த அளவைவிட  குறைத்தது, கல்விக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, மாதம் ஒரு முறை மின்பயன்பாட்டைக் கணக்கெடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 மின்கட்டணம் குறைப்பு, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் என ஆசை காட்டி மோசம் செய்தது என திமுகவின் தோல்விகளும், துரோகங்களும், மோசடிகளும் உலகவரைபடத்தின் பரப்பளவை விட மிகவும் நீளமானவையாகும். 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது தேர்தல் அறிக்கை வாயிலாக 505 வாக்குறுதிகளை அளித்த மு.க.ஸ்டாலின் அவற்றில் வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி 13% மதிப்பெண்களுடன் படுதோல்வி அடைந்து விட்டார் என்பதை ஏற்கனவே ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். இது தவிர மாவட்ட வாரியாக தேர்தல் பரப்புரையின் போது 700&க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்த மு.க.ஸ்டாலின், அவற்றில் 30 வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் திமுகவும், மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்களை துரோக மீட்டரைக் கொண்டு அளந்தால் அந்த மீட்டரே வெடித்து விடும் என்பது தான் உண்மை. அந்த அளவுக்கு ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு  துரோகங்களை மட்டுமே திமுக செய்திருக்கிறது. மேற்கண்ட அனைத்து துரோகங்களையும் விட பெரும் துரோகம் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சதி செய்து தோற்கடித்தது தான். இதன் மூலம் தமிழ்நாட்டில் 20 மக்களவைத் தொகுதிகளும், 117 சட்டப்பேரவைத் தொகுதிகளும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு பெண்களுக்கு ஒதுக்கப்படுவது தடுக்கப் பட்டுள்ளது. திமுகவின் இந்தத் துரோகத்தை தமிழ்நாட்டுப் பெண்கள் எந்தக் காலத்திலும் மன்னிக்கக் கூடாது. ஆற்று மணல், செம்மண், கனிமவளம் என அனைத்து வகையான இயற்கை வளங்களையும் கொள்ளையடித்த திமுக, ஐந்தாண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறது. திமுகவுக்கு மட்டும் மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சுரண்டி எடுத்து விடுவார்கள்.  தமிழ்நாட்டுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தமிழ்நாட்டு மக்கள் மறந்தும் கூட அனுமதிக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மாதங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை அதிமுகவும்  பாட்டாளி மக்கள் கட்சியும் வைத்திருக்கின்றன.  குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கும், எப்போதும் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாடுவது உறுதி செய்யப்படும். உழவர்களின் வாழ்க்கை சிறக்கவும், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்தவும், படித்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் ஏராளமான திட்டங்களை அதிமுக & பா.ம.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் முன்வைத்திருக்கின்றன. அவை செயல்படுத்தப்பட்டால் தமிழகம் முன்னேறிய மாநிலமாக மாறும். தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்த சாதிவாரி மக்கள்தொகை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள், காவல்துறையினர், போக்குவரத்துத் துறையினர், சத்துணவுப் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், தற்காலிக அரசு ஊழியர்கள், நியாயவிலைக்கடை ஊழியர்கள்,  சர்க்கரை ஆலைப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோரின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தமிழக மக்களின் முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய நாளை மறுநாள் ஏப்ரல் 23&ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க, அதிமுக, பாரதிய ஜனதா,  அ.ம.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதியநீதிக் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், இரட்டை இலை, தாமரை, குக்கர் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழகத்தில் தீய திமுக ஆட்சியை அகற்றி விட்டு, அதிமுகவின் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


--
From: