☰
×

“என் கூட்டத்திலும் மின் தடை... திட்டமிட்டு நடக்கும் பிரச்சனைகள்”- அன்புமணி

 

கரூர் உயிரிழப்பு சம்பவம் போன்று இனி ஒருபோதும் நடக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சென்று  மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நேற்றைய முன்தினம் திருச்சியில் என் கூட்டத்திற்குப் போவதற்கு முன்பு, யாரோ வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்தினார்கள். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கின்ற பிரச்னைகள். நாளைக்கு இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. அதற்கு காவல்துறையும், ஆளுங்கட்சியும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கடந்தவாரம் விஜய் பிரச்சாரம் நடத்தியபோது எவ்வளவு கூட்டம் வந்தது என்று காவல்துறையினருக்கு தெரியும். அதனை திட்டமிட்டு இடத்தை வழங்கியிருக்க வேண்டும். 

அதிகம் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பெண்கள், குழந்தைகள் வருவதை தவிர்த்திருக்க வேண்டும். திமுக அரசின் காவல்துறை உளவு பிரிவு தோல்வி தான் காரணம். விஜயின் பரப்புரைக்கு பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருந்தால் கூட்டநெரிசலில் சிக்கி 40 பேர் பலியானதை தடுத்திருக்கலாம், தவிர்த்திருக்கலாம். கூட்டத்தில் உணவு, தண்ணீர் வசதி செய்திருக்க வேண்டும். மக்களும் பாதுகாப்பாக வந்திருக்க வேண்டும். விசாலமான இடத்தில் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும், சினிமாகாரர்களுக்கு கூட்டம் கூடும் என்ற தவறான கலாச்சாரம் தமிழகத்தில் உள்ளது. பிரச்சாரத்திற்கு அனுமதி, கட்சிகளுக்கிடையே பாரபட்சம் கூடாது” என்றார்.