ராமதாஸின் கனவுகளை நிறைவேற்றவே நடைபயணம்- அன்புமணி
ராமதாஸின் வழியில் அவரது கனவுகளை நிறைவேற்றவே இந்த நடைபயணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
ராமதாஸ் எதிர்ப்பையும் மீரி திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டபடி தொடங்கினார். ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் இன்று தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல்கிறார் .
தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “ராமதாஸின் வழியில் அவரது கனவுகளை நிறைவேற்றவே இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளோம். மக்களுக்கு உரிமையை தராத திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் தொடக்கமே இந்த நடைபயணம். ராமதாஸ் பிறந்த நாளில் நீண்ட ஆயுளுடன் 100 வருடத்திற்கு மேல் வாழ வேண்டும் என பிரார்த்திப்போம். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறினோம். இந்த நடைபயணம் விளம்பரத்திற்காக அல்ல, ஆட்சி மாற்றத்திற்காக... இந்த அரசை யார் யார் எதிர்க்கிறார்களோ? அவர்கள் எல்லோரும் என்னுடன் வாருங்கள். ஒன்று சேர்ந்து இந்த ஆட்சியை அகற்றுவோம்” என்றார்.