“பாமகவில் முழு அதிகாரம் எனக்குத்தான் உள்ளது”- அன்புமணி மீண்டும் போர்க்கொடி
இன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், நாளை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக பாமக சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமகவின் பொதுக்குழுவை கூட்டவும், கட்சியை நடத்தவும் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, அதிகாரம் மிக்கவர் நிறுவனர் என்கின்ற சட்டவிதி கிடையாது. பாமகவில் முழு அதிகாரம் எனக்குத்தான் உள்ளது. 99 சதவீத கட்சியினும் நம்மிடம்தான் உள்ளனர். காலையில் இலந்தைப்பழம் விற்பவரை கூட்டிவந்து பொறுப்பு போடுங்கள் என்றால், கையெழுத்து போடுகிறார். இதிலிருந்து ராமதாஸின் சிந்தனைப்படி இது நடைபெறவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கொள்ளையடிப்பவனுக்கும், கொலை செய்பவனுக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்கி வருகிறார்.
2 மாதங்களாக பாமகவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் குறித்த செய்திகள் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டது. தினமும் நிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் உள்ளேன். பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது பொது வெளியில் விமர்சிப்பார்களா? பாட்டாளி மக்கள் கட்சி சமூக ஊடக பிரிவு கூட்டத்தில், திமுகவையே உண்மையான எதிரியாகக் கண்டுபிடித்து அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்றார்.