தமிழ்நாட்டில் 2031-ல் பா.ம.க. ஆட்சி- அன்புமணி நம்பிக்கை
3 துறை மட்டுமில்ல 20 துறைக்கு மேல ஊழல் நடந்து இருக்கு.. பொதுப்பணித்துறையும் நெடுஞ்சாலைத்துறையும் ஓஹோன்னு அடிச்சி நாஸ்தி பண்ணி வெச்சி இருக்காங்க.. நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்..? என முதல்வருக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆனவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிக்கிறார்கள். 38 ஆண்டுகளாகியும் நம்மால் இன்னும் ஆட்சிக்கு வர முடியவில்லை என்று ஏக்கமாக இருக்கிறது. முதல்வர் விஜய் என் வீட்டில் வந்து என்னிடம் அரை மணி நேரம் பேசிய போது அவரிடம் சொன்னது இது தான். தமிழ்நாட்டில் 2031-ல் நிச்சயமாக பா.ம.க. ஆட்சியமைக்கும். அதற்கான சூழல் தற்போது உருவாகி வருகிறது. சட்டமன்றத்தில் எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் சிறந்த முறையில் செயல்படுகிறார்கள். மற்ற கட்சிகள் எல்லாம் விமர்சனங்களை மாறி மாறிச் செய்து வருகின்றன.தனி நபர் விமர்சனங்களைச் செய்கிறார்கள். சட்டமன்றத்தில் அப்பாவை காணோம், மாமனாரை காணோம்னு தான் மற்ற கட்சிகள் பேசிட்டு இருக்காங்க.. ஆனால் பா.ம.க உறுப்பினர்கள் தான் மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறார்கள் என மக்கள் போற்றுகிறார்கள். விவசாயிகள் பிரச்சனை குறித்து தான் சௌமியா அன்புமணி தொடர்ந்து பேசுகிறார். 2016ல் மாற்றம் முன்னேற்றம் என்று நடைபெற்ற பிரச்சாரம் வெற்றி பெற்றது.. ஆனால் நம்மால் வெற்றிபெற முடியவில்லை.. அந்த பிரச்சாரம் இன்று நடந்திருந்தால் நம்ம தான் ஆளுங்கட்சி.
திமுக ஆட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. மூன்று துறைகளில் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் வேகமாக நடவடிக்கை எடுத்து, மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும்” என்றார்.