“பாமகவின் தலைவர் நான்தான்.. அன்புமணி அல்ல”- ராமதாஸ்
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும். இதுதான் ‘சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நாணயமான கூட்டணி’ என்று மக்கள் பேசுகின்ற அளவிற்கு இந்த கூட்டணி அமையும், அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம்.
டெல்லி நீதிமன்ற தீர்ப்பின்படி, பாமகவின் சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை அன்புமணி உபயோகிக்க கூடாது. அப்படி உபயோகப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பு. ஊடகங்களும், கட்சியின் தலைவர் என அவர் சொல்வதை அப்படியே போடுவது என வருத்தமளிக்கிறது. இனி கட்சியின் தலைவர் அன்புமணி என போட வேண்டாம். பாமகவின் தலைவர் நான்தான்.. அன்புமணி அல்ல. தேர்தல் கூட்டணி தொடர்பாக சீக்கிரமே நல்ல முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகளில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த வகையில் மக்கள்தான் தீர்ப்பளிப்பர்” என்றார்.