பாமக, வன்னியர் சங்கம் இரண்டையும் அன்புமணியிடம் ஒப்படைத்த ராமதாஸ்!
18 மாத இடைவெளிக்கு பின் தந்தை ராமதாஸை அவரது மகன் அன்புமணி சந்தித்தார். அப்போது அன்புமணியை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர்விட்ட ராமதாஸ், தேர்தல் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய அன்புமணியின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார்.
சமூகநீதி கணக்கெடுப்புக்கான அனைத்து கட்சிக்கூட்டம், விவசாயிகளின் பிரச்சனைக்காக அனைத்து விவசாய சங்கங்களை அழைத்ததை வாழ்த்தியுள்ளார். ராமதாஸின் விருப்பப்படி கிராமம் கிராமமாக அன்புமணி செல்வதையும் ஊக்கப்படுத்தியுள்ளார். "நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நினைத்தேனோ, அதை தற்போது நீ செய்து கொண்டிருக்கிறாய்", "நான் உடல் நலனில் கவனம் செலுத்தப் போகிறேன், கட்சியையும் மற்ற அமைப்புகளையும் நீ கவனித்துக்கொள்” என அன்புமணியிடம் ராமதாஸ் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக, வன்னியர் சங்கம் இரண்டையும் ராமதாஸ் அன்புமணியிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படியாக நீண்ட நாட்களுக்கு பிறகு ராமதாஸை அன்புமணி சந்தித்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாசை அக்கட்சியின் கெளரவ தலைவர் ஜி.கே.மணி சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.