×

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை :  முழு பயணத் திட்டம் இதோ..!

 

 ஜூலை 26ம் தேதி இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடி , தூத்துக்குடியில் மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். 1992 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விமான நிலையம், ரூ. 381 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து புறப்பட்டு விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்தடைகிறார்.

இரவு திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி, மறுநாள் ஜூலை 27ஆம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார். அங்கு நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழன் கங்கையை வெற்றி கொண்டதன் 1000வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொல்லியல் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் இந்த நிகழ்வை இந்திய தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டு சிறப்பிக்க உள்ளார். மன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கை பயணம் மற்றும் கடாரம் பயணம், சைவம் மற்றும் சோழ கால சிற்பங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியையும் இந்திய தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், பிரதமர் மோடி முன்னிலையில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சியையும் நடத்துகிறார். அங்கு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, தஞ்சாவூர் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு பாஜகவில் முக்கிய முடிவுகள் எடுக்கும் 24 உறுப்பினர்களைக் கொண்ட மாநில மையக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர்களுக்கு அவர் முக்கிய ஆலோசனைகளை வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து திருச்சி சென்று விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டுச் செல்லும் வகையில் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஆடி திருவாதிரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த நிலையில்தான் பாஜகவின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. ஏப்ரலுக்குப் பிறகு உள் துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு முறை தமிழகம் வந்து சென்றுள்ளார். பிரதமர் மோடியும் கடந்த மே மாதம் தமிழகம் வந்து பாம்பன் பாலத்தை திறந்து வைத்துச் சென்றார். இந்த சூழலில்தான் மீண்டும் தமிழகத்திற்கு வர இருக்கிறார். அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை வன்னியர்கள் அதிகமுள்ள பகுதியாக உள்ளது. இங்கு பாமகவுக்கு அதிகளவு செல்வாக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கவுள்ளதால் இனி பிரதமர் மோடியை அடிக்கடி தமிழகத்தில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.