பாஜவுக்கும் திமுகவிற்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க வேண்டும் - பிரதமர் மோடி..!
கோவையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கோனியம்மன், மருதமலை முருகனுக்கு எனது பிரார்த்தனைகளை காணிக்கையாக்குகிறேன்.
கடந்த 14ம் தேதி உலகம் முழுதும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர். அப்போது அனைவரும் உடல்நலன் பெற்று, அனைத்தும் கிடைத்து வளர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தேன்.
புத்தாண்டு என்பது புதிய நம்பிக்கை, சக்தியை கொண்டாடுகிறது. அன்றைய தினம் முதல் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தேஜ கூட்டணி உள்ளே வரப்போகிறது. திமுக வெளியேறப்போகிறது என்ற தெளிவான செய்தியை தமிழக மக்கள் அனுப்பி உள்ளனர்.கோவை கடும் உழைப்பாளிகளுக்கும் பாசமான மக்களுக்கும் சொந்தமான நிலம், வளர்ச்சி அரசியலுக்கு பக்கபலமாக தேஜ கூட்டணிக்கு உற்றதோழனாக எப்போதும் இருந்து வந்துள்ளீர்கள்.
நான் இங்கு எப்போதும் வந்தாலும் உங்களில் ஒருவனாக உணர்கிறேன்.இன்று மக்கள் முன் ஒரு வருத்தத்தையும், ஆதங்கத்தை முன்வைக்கிறேன். 2023ம் ஆண்டில் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 16 ம் தேதி மகளிர் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வரலாற்று ரீதியிலான நடவடிக்கையை எடுத்து வைத்தோம். தனிப்பட்ட முறையில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆதரவு கோரினேன். அனைத்து பாராட்டுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெளிவாக கூறினேன். சாதாரண குடும்பங்களை சேர்ந்த சகோதரிகள் பார்லிமென்டுக்கும், சட்டசபைக்கும் அதிக எண்ணிக்கையில் வர வேண்டும் என்பது எனது ஆசை.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த முயற்சி தோல்வி அடைந்தது. திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கீழ்த்தரமான அரசியலுக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இரையாக்கினார்கள்.இந்த மசோதா சட்டம் ஆகியிருந்தால், சாதாரண குடும்பங்களை சேர்ந்த பெண்கள் எம்பிக்கள், எம்எல்ஏ ஆக ஆகியிருப்பார்கள்.
தமிழகத்திற்கு அதிக எம்பி தொகுதிகள் கிடைப்பதாக இருந்தது. ஆனால், இதனை திமுக விரும்பவில்லை. திமுகவின் செயல் அம்பலமாகிவிட்டது. அதன் குட்டு வெளிப்பட்டு விட்டது. கருப்பு உடை அணிந்து தனது தீய எண்ணங்களுக்கு திமுக திரைபோட முடியாது. உங்களது கெட்ட செயல்களின் பலன்களில் இருந்து உங்களால் தப்பவே முடியாது. மக்கள் உங்களின் உண்மையான முகங்களை தெரிந்து கொண்டுள்ளனர். பொய் பேசும் திமுகவால் பொய் புரட்டுகளை மறைக்க முடியாது.இது எங்களின் போராட்டத்தின் முடிவு அல்ல. துவக்கம்தான். பாஜவும், தேஜ கூட்டணியும் உங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருவார்கள். இது எனது உறுதிப்பாடு. இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றதுடன் இரவு 8: 30 நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளேன். மகளிர் இட ஒதுக்கீடு குறித்து விரிவாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.திமுகவிடம் எந்த சாதனையும் இல்லை. குற்றம் சொல்ல எந்த பிரச்னையும் இல்லை. இதனால் தான் தொகுதி மறுவரையறை குறித்து பொய் பரப்ப துவங்கி உள்ளனர். தற்போது உள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் நீடிக்க வேண்டும் என திமுக கூறியது. அதன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டது. அப்போது ஒன்றை கூறினர். தற்போது வேறு ஒன்றை கூறினர். சாதாரண பெண்கள் அதிகாரம் பெற்றால் திமுக காங்கிரசுக்கு ஏன் எரிகிறது. ஒற்றை குடும்ப கட்சிகள், அதிகாரம் தங்களது குடும்பத்திற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என அக்கட்சிகள் விரும்புகின்றன.தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. வன்முறை குற்றங்களுக்கு திமுக ஆதரவாக இருந்து பெண்களுக்கு தீங்கு இழைக்கிறது.
பார்லிமென்டிலும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பது இல்லை. பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு சரியான பதில் திமுகவிற்கு கிடைக்கும்.மகளிர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் மசோதாவை ஏன் எதிர்த்தீர்கள். பெண்களுக்கான வாய்ப்பை ஏன் மறுத்தீர்கள் என திமுகவிடம் கேளுங்கள். ஏப்.,23 ல் பலமான, தெளிவான செய்திகளை அவர்களுக்கு அளியுங்கள்.இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான இன்ஜினாக தமிழகம் உள்ளது..
கடந்த 11 ஆண்டுகளில் 14 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ளது. இது நெடுஞ்சாலைகள், ரயில்வேத்துறை, நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றில் அளிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகையை விட இது மிக அதிகம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் இரண்டு விஷயங்கள் சாதனை அளவை எட்டி உள்ளது. முதலில் ஒரு குடும்பத்தின் சொத்து, தமிழகத்தின் கடன் வரலாறு சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தின் அதிகாரத்தில் இருக்கும் குடும்பத்தின் சொத்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மாநிலத்தின் கடனும் உயர்கிறது.குடும்பத்திற்கு, குடும்பத்தால், குடும்பத்திற்காக இதுவே திமுகவின் கொள்கை. முதல்வர் அதே குடும்பம், துணை முதல்வர் அதே குடும்பம். டில்லியில் இருக்கும் முக்கிய எம்பிக்கள் அதே குடும்பம். திரைப்படங்கள், ஊடகங்கள் என பலதுறைகளை ஒரே குடும்பம் தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. திமுகவின் மூத்த தலைவர்கள் கூட ஒரு குடும்பத்தின் இளைய உறுப்பினர்களிடம் தலை தாழ்த்தி நடைபெற வேண்டி உள்ளது.
எப்போது எல்லாம் தமிழக மக்களை சந்திக்கும்போது எல்லாம் ஒரு விஷயத்தை கூறுவார்கள். ஒரு குடும்பத்திற்குள் போட்டி நிலவுகிறது. மகனுக்கும், மருமகனுக்கும் ஒரு விஷயத்தில் கடும் போட்டி நிலவுகிறது. யார் அதிகம் கொள்ளையடிப்பதில் தான் அந்த போட்டி. திமுகவிலும், காங்கிரசுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. மருமகன்கள் அதிசயங்கள் நிகழ்த்தி உள்ளனர்.
இந்தியா ஒரு மகனால், மருமகனால் சலித்துவிட்டது. இன்னொரு மருமகனால் தமிழகம் சலித்து போய்விட்டது. இரண்டு குடும்பங்களால், மக்கள் வேதனையில் உள்ளனர்.பாஜவுக்கும் திமுகவிற்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க வேண்டும். அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல், நேர்மை , கடுமையான உழைப்பில் உயர்ந்தவர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்.
கயிறு வாரிய தலைவராக இருந்தபோது ஏற்றுமதியை சாதனை அளவுக்கு உயர்த்தியவர். இந்த மண்ணின் மைந்தன் இப்போது துணை ஜனாதிபதியாக உள்ளார். அவரால் நமது நாட்டுக்கு பெருமை.