ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
ராஜேந்திரசோழன் பிறந்தநாளை இந்த ஆண்டில் மத்திய கலாச்சார துறை சார்பில் 5 நாள் விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஜூலை 23-ம் தேதி, விழாவை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தொடங்கிவைக்கிறார். நிறைவு நாளான ஜூலை 27-ம் தேதி நடைபெறும் திருவாசகம் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும், அவர் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையொட்டி, வரும் 26-ம் தேதி டெல்லியில் இருந்து கேரளாசெல்லும் பிரதமர் மோடி, திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அன்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு வருவதாக கூறப்படுகிறது. 27-ம் தேதி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தொடர்ந்து, 28-ம் தேதி பெரம்பலூர், தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. விழா ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.