நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்- விரைவில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குவஹாத்தியில் இருந்து கொல்கத்தாவிற்கு இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நாட்டில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை கொல்கத்தா (ஹவுரா)- குவஹாத்தி இடையே விரைவில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார். வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் கட்டணங்கள் விமானப் பயணத்தைவிட கணிசமாக குறைவாக இருக்கும். இந்த ரயில் சேவைகள் ஜனவரி 18 அல்லது 19 ஆம் தேதி அன்று செயல்பாட்டிற்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
குவஹாத்தியில் இருந்து ஹவுரா (கொல்கத்தா) வரையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் கட்டணம் 3ACக்கு (உணவு உட்பட) தோராயமாக ரூ.2,300 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2AC கட்டணம் சுமார் ரூ.3,000 ஆகவும், முதல் ஏசி கட்டணம் ரூ.3,600 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோட்டா - நாக்டா ரயில் பாதையில் நடைபெற்ற வந்தே பாரத் படுக்கை வசதியுடன் கூடிய ரயிலின் அதிவேக சோதனை ஓட்டம், மணிக்கு 180 கி.மீ வேகத்தை எட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த சோதனையில், ரயிலின் நிலைத்தன்மை, பிரேக்கிங் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்:
பாதுகாப்பு: 'கவச்' பாதுகாப்பு அமைப்பு, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் தீயணைப்பு வசதிகள்.
வசதிகள்: தானியங்கி கதவுகள், அதிர்வு இல்லாத பயணம், உயர்தர படுக்கை வசதிகள் மற்றும் நவீன கழிவறைகள்.
தொழில்நுட்பம்: ஆற்றல் சேமிப்பு பிரேக்கிங் சிஸ்டம், காற்று சுத்திகரிப்புக்கான UV-C விளக்குகள் மற்றும் அவசர கால தகவல் தொடர்பு வசதி.
மாற்றுத்திறனாளிகள்: அவர்களுக்கென பிரத்யேக கழிவறை வசதி ஓட்டுநர் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி, 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றுவதுடன், விரைவில் பயணிகள் சேவைக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.