×

பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை ரத்து

 

பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தார். விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி  திருச்சி வந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர். 

இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் மோடி, ஜனவரி 19-ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்றும் திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்றும் தகவல் வெளியானது. மேலும் திருப்பூரில் வரும் 19 ஆம் தேதி பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.  இதற்காக 6 இடங்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சில நிர்வாகக் காரணங்களால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.