×

’தை பிறந்தாள் வழி பிறக்கும்’ .. 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு...

 


தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை  காணொலி வாயிலாக  பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம்,  அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.  இந்த மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்து நேரில் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.  அதற்குள்ளாக நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து அவரது தமிழக வருகை பயணம் ரத்து செய்யப்பட்டது.  இதனையடுத்து இன்று 11 மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக  திறந்து வைத்தார்.

 இந்த மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,  மத்திய இணை அமைச்சர்கள் முருகன்,  அமைச்சர்கள்  தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரிகளைத் திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனக் கூறி தனது உரையை தொடங்கினார்.  தொடர்ந்து பேசிய அவர்,  ஒரே மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை திறப்பது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார். அதுவரை உத்தரப் பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகள் திறந்ததே சாதனையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,  கடந்த 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 82 , 000  மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தது,  தற்போது அது ஒரு லட்சத்தை தாண்டி இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அதேபோல்  2014ஆம் ஆண்டு நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்த நிலையில்,  தற்போது நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருப்பதாகவும் ,  பாஜக ஆட்சிக்கு வரும்போது நாட்டில் 387 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தன.  தற்போது 596 ஆக அந்த எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது என்றும் அவர் கூறினார்.