பிரதமர் மோடியின் ஹெலிபேட் இறங்கும் இடம் திடீரென மாற்றம்
பிரதமர் மோடி வருகையையொட்டி கங்கை கொண்ட சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவிலில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் நாளை இரவு 10:30 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வருகிறார். திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கும் பிரதமர் நாளை இரவு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க உள்ளார். ஓய்வுக்கு பின் மறுநாள் 27 ஆம் தேதி காலை மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகைக்காக திருச்சி மாவட்டத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி கங்கை கொண்ட சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவிலில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குருவாலப்பர் கோவில் இடத்திற்கு பதிலாக பொன்னேரியில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹெலிபேட் அருகே உயர் மின்னழுத்த கோபுரங்கள் உள்ளதால் விமானியின் அறிவுரையின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.