பள்ளி, கல்லூரிகளுக்குப் பிரதமர் மோடி அவசர வேண்டுகோள்..!!
குஜராத் மாநிலம் வதோதராவில் சுமார் 2,000 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட சர்தார்தாம் விடுதி வளாகத்தைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி,
"கொரோனா பெருந்தொற்றில் தொடங்கிய உலகளாவிய நிலையற்ற சூழல் இன்னும் நீடித்து வருகிறது. தற்போது மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல்களால் அந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
நாட்டு மக்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க வேண்டும்.
மெட்ரோ ரயில், மின்சார பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். மேலும், கார்பூலிங்கை ஊக்குவிக்க வேண்டும். கார் வைத்திருப்பவர்கள் ஒரே வாகனத்தில் அதிகமானவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம் தற்போது பல விஷயங்களை மிகவும் எளிதாக்கியுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவி நமக்கு மிகுந்த பயனளிக்கும்.
எரிபொருள் பயன்பாட்டை குறைத்து நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக கொரோனா காலத்தைப் போல ஆன்லைன் வகுப்பு முறையை பின்பற்றலாம்" என்று பேசினார்.
மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு சுமார் 90 சதவீதம் அளவுக்கு இறக்குமதியையே சார்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தல் விடுத்து வருகிறார்.
அதுமட்டுமின்றி கொரோனா காலத்தை போல சாத்தியமுள்ள நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் வசதியை கொடுக்கலாம் என்றும், மக்கள் ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவுறுத்தல் நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.