×

நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்கவுள்ள நிலையில், இன்று மாணவி தற்கொலை

 

புழலில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தற்கொலை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை அடுத்த புழல் லிங்கம் தெருவில் வசித்து வருபவர் டெய்லர் ராதாகிருஷ்ணன். இவருடைய மூத்த மகள் ரூபி என்கிற பிருந்தா மாதவரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைபள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். பிருந்தா தனது பள்ளி கட்டணத்தை கட்டவில்லை என்று மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று தன் தந்தையிடம் பள்ளிக் கட்டணத்தை கட்ட வேண்டும் என்று கேட்டபோது தந்தையும் இரண்டு நாட்களில் பள்ளி கட்டணத்தை கட்டுகிறேன் என்று கூறிவிட்டு வெளியில் வேலைக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் நேற்றிரவு பிருந்தா துப்பட்டாவால் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய சகோதரி அலறியடித்தபடி பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து புழல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர். நாளை +2மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்கவுள்ள நிலையில் +2 மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.