×

இதையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்..! மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!  

 

மனித உடலில் சராசரி வெப்பநிலை, 98.6 டிகிரி பாரன்ஹீட். அதற்கு மேல் வெப்பநிலை அதிகரிக்கும்போது, தலைவலி, உடல்சோர்வு, தலைச்சுற்றல், தசைபிடிப்பு, மயக்கம், வலிப்பு போன்ற, உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

இவ்வாறான சூழலில், உடல் அதிக வெப்ப நிலையில் காணப்படும். அப்போது, உடல் வெப்பத்தை தணிக்க, சிலர் சுயமாக பாராசிட்டமால் மாத்திரையை எடுத்து கொள்கின்றனர். வெயிலின் தீவிரத்தால் ஏற்படும் உடல் வெப்பம், பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால், எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும் என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது: பொதுவாக மக்கள், சுயமாக மருந்து, மாத்திரை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். வெயில் வெப்பத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவரை, நீரில் நனைத்த துணியால், உடலை துடைத்து, விசிறி விட வேண்டும். 

குளிர்ந்த நீர், இளநீர், மோர் ஆகியவற்றை பருக கொடுக்கலாம். அவர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, குளிர்ந்த இடத்தில் அமர வைப்பது நல்லது. மயக்க நிலையில் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அதை தவிர்த்து, சுயமாக ஆஸ்பிரின், பாராசிட்டாமால் மாத்திரை எடுத்து கொள்ளக் கூடாது. இம்மருந்துகள், மூளையில் வெப்பநிலை கட்டுப்பாட்டு மையத்தை பாதிக்கும் கிருமிகளால் வரும் காய்ச்சலுக்கு தான் பலனளிக்கும்.

வெயில் வெப்பத்தின்போது சாப்பிட்டால், எதிர்மறையாக கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள், ரத்த அழுத்த குறைபாடு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இம்மருந்துகளை சாதாரண காய்ச்சல் மருந்துகள் என, தவறாக கருதக் கூடாது. இம்மருந்துகள் டாக்டர்கள் பரிந்துரையின்றி, அதிகம் எடுத்துக் கொண்டாலும், பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 

இவ்வாறு அவர் கூறினார்.