×

"ஜல்லிக்கட்டுக்கு நடக்குமா? நடக்காதா?" - தடை கோரி ஹைகோர்ட்டில் மனு!

 

பொங்கல் என்று வந்துவிட்டால் ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனி மவுசு உண்டு. மதுரை மாவட்டமே களைகட்டும். உலகப் புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு தான் காரணம். அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரபலமானவை தான். இவை தவிர மதுரைச் சுற்றியுள்ள புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஜனவரி 14-இல் அவனியாபுரம், 15-இல் பாலமேடு, 16-இல்அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என சொல்லப்பட்டது.

இந்தாண்டு ஜனவரிக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றே என அனைவரும் நினைத்தனர்.  இச்சூழலில் கொரோனா பரவல் அதிகரிக்க போட்டிகள் நடத்தப்படுமா என சந்தேகம் எழுந்தது. அதற்கு நேற்றே அரசு விடை கொடுத்துவிட்டது. ஆம் கடும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. 300 மாடிபிடி வீரர்கள், 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இச்சூழலில் இதனை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், " தமிழ்நாடு அரசு ஜனவரி 10ஆம் தேதி வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மேலும் இந்த அரசாணையில் ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விழாக்காலங்களில் மதுபானக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி அளித்ததை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.