×

"ஈபிஎஸ் காண்பது பகல் கனவு; இது பாஜகவிற்கு கொடுக்கும் வார்னிங்" - அமைச்சர் சேகர் பாபு பதிலடி!!

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி  நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.  அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டரிலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் பணிகளை அதிகாரிகள் ,போலீசார் நேர்மையாக செய்ய வேண்டும். திமுகவிற்கு பயந்து அதிகாரிகள் செயல்படக்கூடாது. தமிழ்நாட்டில் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் .அப்படி நேர்மையாக தேர்தல் நடத்தாவிட்டால் நாங்கள் நடத்த வைப்போம். நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்பது தானே முதலமைச்சருக்கு அழகு .நான் முதல்-அமைச்சராக இருந்தபோது ஊரக உள்ளாட்சி தேர்தலை அப்படித்தானே செய்தேன். நாங்கள் எதிர்க்கட்சியினரை,  மக்களை அப்படித்தானே சந்தித்தோம். அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இல்லையே? அந்த  தெம்பு இல்லாமல்தான் முறைகேடு சம்பவங்களில் திமுகவினர் ஈடுபட துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் என்ன ஆனது என பார்க்கவேண்டும் .மேற்கு வங்கத்தில் ஆளுநர் அங்கு சட்டசபையை முடக்கியுள்ளார். தமிழ் நாட்டிலும் இதே போல் ஆட்சியில் தவறுகள் நடந்தாலும், ஆளுநர் சட்டசபையை   முடக்கும் நிலை ஏற்படலாம் . இதனால் திமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது மீண்டும் ஆட்சிக்கு அதிமுக வரும். 4 ஆண்டுகள்  மட்டுமல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக சொன்னதை செய்ய போவதில்லை " என்று சரமாரியாக தாக்கி பேசினார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, " தமிழக சட்டமன்றத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது. அதிமுகவின் ஆசையை மத்திய அரசுக்கு தனது பேச்சின் மூலம் எடப்பாடி தெரியப்படுத்தியுள்ளார்.  முடக்கினால் தான் அடுத்த தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைப்போம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இது பாஜகவிற்கான வார்னிங். தமிழக சட்டசபை முடக்கப்படும் என்ற  எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அறியாமையை காட்டுகிறது.  அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு சித்தப்பா என பெயர் வைக்கலாம்" பதிலடி கொடுத்துள்ளார்.