“கடந்த 5 ஆண்டுகளில் 8,900 கொலைகள், 2 லாக் அப் மரணங்கள்”- பியூஷ் கோயல் பரபரப்பு குற்றச்சாட்டு
மத்திய அரசு 9 லட்சம் இலவச வீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தமிழகத்தில் அந்தத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “தமிழ்நாடு சிறப்புவாய்ந்த மாநிலம். ஆனால் இந்த மாநிலம் திமுக அரசின் ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றால் பின்னோக்கிச்செல்கிறது. போதைப்பொருட்கள் அதிகளவு புழங்குவதால் இளைஞர் சமூதாயம் சீரழிந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலத்தில் இருந்தது போல் அல்லாமல் மிகவும் மோசமான நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசு யூடியூபர்கள், சோசியல் மீடியா ஆகியவற்றின் உதவிகொண்டு இயங்குகிறது. அரசுக்கு எதிரான கேள்விகேட்பவர்களை ஒடுக்குகிறது. தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்திவைத்து மிரட்டி, உண்மைகளை வெளிவராமல் செய்துவிட்டது. மோசமான சாலைகள், தண்ணீர் பிரச்சனைகள் உள்ளன. 1000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், உக்கடம் குளம் மேம்பாடு ஆகியவை செயல்படுத்தப்படவில்லை. திமுகவின் 75 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை நாடு முழுவதும் உள்ள என்.டி.ஏ கூட்டணி அரசுகள் குறைத்துள்ளன. ஆனால் திமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை. இந்தியாவிலேயே கடன் வாங்குவதன் மூலம் தமிழ்நாடு சீரழிந்துள்ளது. திமுக அரசு 28 ஆயிரம் எஸ்.சி.எஸ்.டி ஊழியர்களின் ரிட்டையர்மெண்ட் பணத்தை கையாடல் செய்துள்ளது. ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினரிடம், இந்த தொகைகள் எங்கு சென்றது என நான் கேள்வி எழுப்புகிறேன். மணல், மது மாபியாக்கள் நாட்டை வழிநடத்துகின்றனர். உதயநிதியின் பேச்சுக்களுக்காக வன்மையாக கண்டிக்கிறேன். இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், உதயநிதியை முதலமைச்சராக்குவார்கள். உதயநிதியை முதல்வராக்கம் மாட்டேன் என்று ஸ்டாலின் உறுதி அளிக்க வேண்டும். அளிக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி, நிச்சயம் நாட்டிற்கு நல்லதை ஏற்படுத்தும். செந்தில்பாலாஜி, மின்சாரத்துறையில் ஏற்படுத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். 8900 கொலைகள், 2 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மத்திய அரசு 9 லட்சம் இலவச வீடுகளுக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இதுவரை அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பலனடைவதை திமுக விரும்பவில்லை. கோவை மக்கள், 23ம் தேதி என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் திமுக அரசு, கோவை மெட்ரோ தொடர்பான முழுமையடையாத அறிக்கையை அனுப்பினார்கள். வளர்ச்சிக்கு எதிரான நிலையைத்தான் திமுக எப்போது எடுக்கும். தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. திமுக, காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இரும்பு விலை நமது அண்டை நாடுகளைக்காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. தேர்தல் வந்ததும் உதயநிதி ஸ்டாலின் கோயில்களுக்கு செல்லத்துவங்கிவிட்டார். இது அவர்களது தேர்தல் கால இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது” என்றார்.