×

“தமிழ்நாடு திவால் ஆகும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது! கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது”- பியூஷ் கோயல் பரபரப்பு

 

தமிழ்நாடு திவால் ஆகும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பியூஷ் கோயல். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “தமிழ்நாடு அரசின் கடன் திமுக ஆட்சியில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு திவால் ஆகும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு வாங்கிய பெரும்தொகையால் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் எவை? 5 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தாண்டு ரூ76,000 கோடி தொகை வட்டி செலுத்துவதற்கு மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாய் எல்லாம் கடனை அடைக்கவே சரியாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு வந்த ரூ.80,000 கோடி ஜிஎஸ்டி எங்கே போனது? பொருளாதார முன்னேற்றத்திற்கான சூழலை தமிழ்நாடு அரசு தவறவிட்டுவிட்டது. தமிழக அரசின் கருவூலம் காலியாக உள்ளது. கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஜிஎஸ்டி அமலான பிறகு மாநிலங்களுக்கான பகிர்வு தொகை அதிகரித்துள்ளது. பிரச்சனை குறித்து பேசாமல் திசை திருப்பும் வேலையை மட்டுமே முதலமைச்சர் செய்கிறார். திமுக அரசு சொல்வதுபோல் ரூ.12 லட்சம் கோடி முதலீடு வரவில்லை. 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் தாரளமாக உள்ளது” என்றார்.