×

கோவை தேர்தல் களத்தில் 'பிங்க்' புரட்சி! 10 தொகுதிகளிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக வாக்குச்சாவடிகள்!

 

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் தலா ஒரு 'பிங்க்' (பெண்கள் மட்டும்) ஓட்டுச்சாவடிகள் அமைக்க திட்டமிட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 3,563 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

8 துணை ஓட்டுச்சாவடிகளும் தயார் நிலையில்உள்ளன. 182 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், 8,343 வாக்குச்சீட்டு இயந்திரங்கள், 5,200 கண்ட்ரோல் யூனிட், 5,572 விவிபேட் கருவிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்படவுள்ள தலா ஒரு 'பிங்க்' ஓட்டுச்சாவடியில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் முதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வரை அனைவரும் பெண்களாகவே நியமிக்கப்பட உள்ளனர்.

இதுதவிர, மாற்றுத்திறனாளிகளால் முழுமையாக நிர்வகிக்கப்படும் ஒரு பிரத்யேக வாக்குச்சாவடியும், முதல்முறை வாக்காளர்களை கவரும் வகையில் 10 மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

பிங்க் நிற வாக்குச்சாவடி மையத்தின் முக்கிய அம்சங்கள்:

பிங்க் நிற பூத்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே.கோடை வெயிலில், பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிங்க் பூத்களில் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு அனைவரும் வாக்களிக்கலாம்.