×

பெண்களுக்காக "பிங்க்" வாக்குச்சாவடி அமைப்பு..!

 

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி அரசு பள்ளியில் பெண் வாக்காளர்களை கவரும் விதத்தில் "பிங்க்" வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவிற்கான வாக்குசாவடிகளை தயார் செய்யும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது.

இவற்றில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள், இன்று (ஏப்.22) நடைபெற உள்ளன. 

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி அரசு பள்ளியில் பெண் வாக்காளர்களை கவரும் விதத்தில் "பிங்க்" வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே தொகுதி வாரியாக தலா ஒரு மாதிரி மற்றும் முழுமையாக பெண் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியும் (பிங்க் பூத்) அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, மதுரை கிழக்கு தொகுதியில் சிறுதூர் ஜெயின் வித்யாலயா பள்ளி, மதுரை வடக்கு தொகுதியில் அண்ணாநகர் அம்பிகா கல்லூரி, மதுரை தெற்கு தொகுதியில் நிர்மலா பெண்கள் மேனிலைப்பள்ளி, மதுரை மத்திய தொகுதியில் சேதுபதி மேனிலைப்பள்ளி, திருப்பரங்குன்றம் தொகுதியில் அவனியாபுரம் பிஎம்எஸ் விதியாலயா, திருமங்கலம் தொகுதியில் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி உள்ளிட்டவை பெண் அலுவலர்கள் பணியாற்றும் பிங்க் பூத்துகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

பெண்கள் பணியாற்றும் ‘பிங்க் பூத்’

ஒரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் என, அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். இவை ‘பிங்க் பூத்’ என அழைக்கப்படுகின்றன. பெண் வாக்காளர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள், எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க இது உதவுகிறது.

பிங்க் பூத்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, குடிநீர் மற்றும் நிழற்கூடங்கள் போன்றவை உள்ளன. பெண் வாக்காளர்கள் பொது வாக்குச்சாவடியில், நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம். இது பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்துவற்காக தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்படுகிறது.