×

"நகர்ப்புற தேர்தலை நடத்தாதீக"... தேர்தல் ஆணையத்துக்கு புது தலைவலி - அப்போ சுப்ரீம் கோர்ட்டுக்கு என்ன பதில்?

 

தமிழ்நாடு அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 2,000 முதல் 3,000 வரை அதிகரித்து வருகிறது. இச்சூழலில் தேர்தலை நடத்தினால் கரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். மார்ச் மாதத்திற்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

ஆகவே மார்ச் மாதத்திலோ அல்லது மார்ச் மாத இறுதியிலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவெடுக்கலாம். இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுவதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு முடிவு குறித்து எந்நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக எடுக்க பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார். இதனை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு  ஏற்றுக்கொண்டுள்ளது.

நாளை மறுநாள் அதாவது ஜனவரி 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஜனவரி 27ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான வழக்கு நாளை மறுநாள் விசாரணை செய்யப்படவுள்ளது.